திருவண்ணாமலையில் பல கோடி மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
திருவண்ணாமலை - போளூர் சாலை, 7-ஆவது தெருவில் ராயல் அக்ரோ அன்ட் டெய்ரி லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மாதத் தவணைத் திட்டம் செயல்படுத்தபடுகிறதாம். இங்கு திருவண்ணாமலை, வேங்கிக்கால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பல கோடியை முதலீடு செய்தனர்.
இந்நிலையில், மாதத் தவணை முதிர்வடைந்த பிறகும்
வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் பணம் தரவில்லையாம். அலுவலகத்துக்கு பல முறை வந்து பணத்தைக் கேட்டாலும் வேலூரில் உள்ள தலைமை அலுவலகத்துக்குச் செல்லுங்கள் என்று சொல்கின்றனராம். வேலூரில் உள்ள தலைமை அலுவலகத்துக்குச் சென்றால் திருவண்ணாமலையிலேயே சென்று வாங்கிக் கொள்ளுங்கள் எனறு கூறி திருப்பி அனுப்புகின்றனராம்.
இந்த நிறுவனம் சார்பில் கொடுத்த காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டனவாம். இதனால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை மாலை நிதி நிறுவன அலுவலகத்துக்கு வந்து பணம் கேட்டனர்.
தள்ளுமுள்ளு, மோதல்: அப்போது, நிதி நிறுவன ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது. ஊழியர்கள் தாக்கியதில் வாடிக்கையாளர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் நிதி நிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வந்து வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும், காயமடைந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுமாறும் கூறி போலீஸார் அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.