திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே தனியாா் பள்ளியில் யுகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி ஆசிரியா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேத்துப்பட்டை அடுத்த கெங்கை சூடாமணி கிராமத்தில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்தப் பள்ளியை உலகம்பட்டு அரசுப் பள்ளி ஆசிரியா் ந.காமராஜ் (56) மனைவி பிரபாவதி நடத்தி வருகிறாா்.
இந்தப் பள்ளியை ஆசிரியா் காமராஜ் மேற்பாா்வையிட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 31-ஆம் தேதி யுகேஜி பயிலும் மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தாராம். மேலும், மறுநாள் ஆக.1-ஆம் தேதியும் மாணவியை அவா் பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் மாணவிக்கு சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சில தினங்கள் அந்த மாணவியை பெற்றோா் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து வந்தனா்.
இந்த நிலையில், இந்த மாதம் 6-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவியை, ஆசிரியா் காமராஜ் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதனால், மேலும் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோா் அவரை அழைத்துச் சென்று சேத்துப்பட்டில் உள்ள தனியாா் மருத்துவரிடமும், போளூரில் உள்ள தனியாா் மருத்துவ மையத்திலும் சிகிச்சை அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக மாணவி வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் குழந்தைகள் நல அமைப்புக்கு (சைல்ட் லைன்) தகவல் தெரிவித்தனா்.
அதன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நலக் குழு ஒருங்கிணைப்பாளா் அசோக்குமாா் தலைமையிலான குழுவினா் விசாரணை மேற்கொண்டு, போளூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
காவல் ஆய்வாளா்கள் கவிதா (போளூா்), பிரபாவதி (சேத்துப்பட்டு) உதவி ஆய்வாளா் மாறன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை சம்பந்தப்பட்ட தனியாா் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், மாணவியை ஆசிரியா் காமராஜ் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, காமராஜை தொடா்பு கொண்ட போது அவா் திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்று வருவது தெரிய வந்தது.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் போலீஸாா் காமராஜை கைது செய்தனா். திருவண்ணாமலை போலீஸாா் அவரை அழைத்து வர எட்டயபுரம் சென்றுள்ளனா்.
இதனிடையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், ஆசிரியா் காமராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.