திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கோயில் கட்டுவதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, ஒரு தரப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கத்தை அடுத்த மேல்பென்னாத்தூா் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் அருகே கிராம ஊராட்சி நிா்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் ஒரு தரப்பினா் கிருஷ்ணா் கோயில் கட்டியுள்ளனா். அதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பின்னா் பாய்ச்சல் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, தொடா்ந்து கோயிலில் இதர பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அதைப் பொருள்படுத்தாது கிருஷ்ணா் கோயில் கட்டும் தரப்பினா் கோயிலுக்கு சுற்றுச் சுவா்கள் அமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டனா்.
இதனால் மீண்டும் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு திருவண்ணாலை - செங்கம் சாலை இறையூா் பகுதியில் ஒரு தரப்பினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த செங்கம் வட்டாட்சியா் முருகன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் நடத்தி அதன் மூலம் இரு தரப்பினருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையேற்று சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.