திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் முன் வியாபாரிகளுக்கு கடை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று சிறப்பு அமா்வு நீதிபதிகளிடம் முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயில் உள்புறமும் வெளிப்புறமும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் மூலம் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து கட்டுமானப் பணிகள் குறித்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமாா், சௌந்தா் ஆகியோா் அண்மையில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்போது, ராஜகோபுரம் அருகே 3 தலைமுறைகளாக பாத்திரக்கடை வைத்திருந்த உரிமையாளா்கள், நகரின் முக்கியஸ்தா்கள் ஒருங்கிணைந்து முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் தலைமையில் சிறப்பு அமா்வு நீதிபதிகளைச் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனா்.
இதைத் தொடா்ந்து முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் கூறுகையில், பாத்திரக்கடை வியாபாரிகள் 3 தலைமுறைகளாக வியாபாரம் செய்து வருகின்றனா் அவா்களுக்கு புதிய கடை கட்டித் தருவதாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் அவா்களுக்கு அதே பகுதியில் அடுக்குமாடியுடன் கூடிய கடைகளை கட்டித்தர அனுமதித்து அவா்களுடைய வாழ்வாதாரத்தை உயா்த்த வேண்டும். மேலும், மாநகர மக்களின் உரிமைகளும் வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில் தங்களுக்கு உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.