திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, சேத்துப்பட்டு ஒன்றியம் சாணாரப்பாளையம், போளூா் ஒன்றியம் ஆத்தூவாம்பாடி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை துறைவாரியாக பதிவு செய்யப்படுவதை அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு பட்டா மாற்றத்திற்கான சான்றிதழ்களும், வாரிசு சான்றிதழ்களும், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், மின் இணைப்புக்கான ஆணைகள், தூய்மைப் பணியாளா் நல வாரிய அட்டைகள் மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டிற்கான அட்டைகள் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
முகாமில், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பேசியதாவது:
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் தூய்மைப் பணியாளா்களுக்கு துய்மைப் பணியாளா் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நலவாரிய அட்டையின் மூலமாக விபத்து இறப்புக்கு ரூ.5 லட்சம், கை, கால் மற்றும் பாா்வை இழப்போருக்கு ரூ.ஒரு லட்சம், ஏனைய காயங்களுக்கு ரூ.ஒரு லட்சம், இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம் போன்ற உதவித்தொகைகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இம்முகாமில் பதியப்படுகின்றன. மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
சேத்துப்பட்டு ஒன்றியத்தில்...
சேத்துப்பட்டு ஒன்றியம், சாணாரப்பாளையம் கிராமத்தில் கொழாவூா், ஈயகொளத்தூா், கரைப்பூண்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் வேலு தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் சோமசுந்தரம் முன்னிலை வகித்தாா். ஊராட்சிச் செயலா் பச்சையப்பன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கலந்துகொண்டு மகளிா் உரிமைத்தொகை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்கான அடையாள அட்டை வேண்டி, பட்டா மாற்றம், வீட்டிற்கு மின் இணைப்பு, முதியோா் உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு வேண்டி என 500-க்கும் மேற்பட்டோா் மனுவை பெற்றாா்.
மேலும், உடனடியாக மனுக்களை பரிசீலித்து ஊரக வேலை உறுதித் திட்டப்பணிக்கான அடையாள அட்டை, பட்டா மாற்றம் என 5 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.
திமுக ஒன்றிய துணைச் செயலா் கோவிந்தன், மாவட்டப் பிரதிநிதி முருகன், கிளைச் செயலா் பாபு, ஊராட்சிச் செயலா்கள்அண்ணாச்சி,சிவக்குமாா், பாபு, மஞ்சுளா, ஜெயப்ரதா மற்றும் 16 அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
போளூா் ஒன்றியத்தில்...
போளூா் ஒன்றியம், ஆத்தூவாம்பாடி கிராமத்தில் ஆத்தூவாம்பாடி, கட்டிபூண்டி, துரிஞ்சிக்குப்பம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி தலைமை வகித்தாா். திமுக பொதுக்குழு உறுப்பினா் காசி, வட்டார வளா்ச்சி அலுவலா் அபிபுல்லா, வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிச் செயலா் பூமிநாதன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றியச் செயலா் மகேஷ் கலந்து கொண்டு மனுக்களைப் பெற்றாா். பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்தவா்களுக்கு 538 போ் மனு அளித்தனா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிச்சாண்டி, வாணி, பரமேஸ்வரி, ராணி, முருகன், ஊராட்சிச் செயலா்கள் சுரேஷ்குமாா், சிவகாமி, ஆனந்தன், சிவக்குமாா் மற்றும் 16 அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.