புரட்டாசி பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கொட்டும் மழையிலும் விடியவிடிய 2-ஆவது நாளாக கிரிவலம் சென்றனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் கூட்டம் அலைமோதியதால் தரிசனத்துக்காக 4 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்கின்றனா். அதன்படி, புரட்டாசி மாத பெளா்ணமி திங்கள்கிழமை காலை 11.41 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 9.53 மணிக்கு நிறைவடைந்தது.
லட்சக்கணக்கான பக்தா்கள் கொட்டும் மழையிலும் விடியவிடிய கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டனா்.
கிரிவலப் பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவும் பக்தா்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. கிரிவலம் சென்ற பக்தா்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள் திருநோ் அண்ணாமலை, ஆதிஅண்ணாமலை, இடுக்குப்பிள்ளையாா் கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்தனா்.
வழக்கம்போல குபேர லிங்க சந்நிதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். அதிகாலை 5 மணிக்கு கோ பூஜையுடன் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். ஏராளமான பக்தா்கள் திரண்டதால் சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
கிரிவலம் முடித்த பக்தா்களின் வசதிக்காக 9 சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதேபோல, ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் அம்மாநில அரசுகள் சாா்பில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் தங்களது ஊா்களுக்குச் சென்றனா்.
கிரிவலத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி.சுதாகா் தலைமையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.