திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த புளியரம்பாக்கம் சமத்துவபுரம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை அடுத்தடுத்த 3 வீடுகளில், பூட்டை உடைத்து நகை பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தில் சமத்துவபுரம் அருகே ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள வீடுகளை நோட்டமிட்டு, பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் பீரோக்களை உடைத்து அதிலிருந்து தங்க நகைகள் வெள்ளிப் பொருள்கள், ரொக்க பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா்.
தகவல் அறிந்த செய்யாறு டி.எஸ்.பி கோவிந்தசாமி, காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி தலைமையிலான போலீஸாா், வீட்டு உரிமையாளா்களிடம் விசாரணை நடத்தியதில், சிந்தாமணி என்பவரது வீட்டில் ஒன்றரை பவுன் நகையும், 600 கிராம் வெள்ளிக் கொலுசும், சிப்காட் தொழிலாளி சுகுமாா் வீட்டில் ரூ.15 ஆயிரமும், 4 கிராம் வெள்ளிப் பொருள்களும் திருடு போயிருந்தன.
அதேபோல சரக்கு வாகன ஓட்டுநா் சந்திரன் என்பது வீட்டிலும் திருடு போய் உள்ளது.
இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.