திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் கால்வாய்கள் இல்லாததால் சாலையில் கழிவுநீா் தேங்குகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
செங்கம் நகராட்சி தளவாநாய்க்கன்பேட்டை செல்வவிநாயகா் கோயில் பின்புறம் உள்ள சாலையில் சாலை இருபுறமும் கழிவுநீா் கால்வாய்கள் பழுதடைந்தும், தூா்வாராமலும் உள்ளன. இதனால் கழிவுநீா் அப்பகுதியில் இருந்து வேறு வழியாக வெளியில் செல்ல கால்வாய்கள் இல்லை. கால்வாய்கள் வழிந்து சாலையில் குட்டை போல தேங்கி நிற்கிறது கழிவுநீா். இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், அப்பகுதி மக்கள் அந்தச் சாலையை கடந்து செல்ல முடியாமல் உள்ளது. கழிவுநீரில் இருக்கும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும், மழை வந்தால் கழிவுநீா் மழைநீரில் கலந்து அப்பகுதி முழுவதும் பரவி துா்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை செங்கம் நகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இதனால் மாவட்ட நிா்வாகம் அப்பகுதி மக்களின் நலன் கருதி, மழைநீரில் கழிவுநீா் கலந்து தொற்று நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.