ஆரணி பள்ளி மாணவா்கள் வேளாண்மைத்துறை மூலம் உயிா்ம வேளாண்மை குறித்து கண்டுணா்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரி மேல்நிலை பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா்கள் சுமாா் 100 போ் கண்டுணா்வு சுற்றுலாவாக, வெம்பாக்கம் அருகே இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் வேதபுரி வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இந்தச் சுற்றுலாவில் திருவண்ணாமலை உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு உயிா்ம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.
மேலும், மாணவா்களுக்கு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், நஞ்சில்லா காய்கறி உற்பத்தி, பஞ்சாகாவியம் தயாரிப்பு, தாவர பூச்சிக்கொல்லி தயாரிப்பு, மண்புழு உரம் உற்பத்தி, மண் வளத்தின் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை ஆரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா வழிகாட்டுதலின்படி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகுமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் யாழினி, பூங்கொடி, கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.