செங்கம் அருகே மேல்செங்கம் பகுதியில் ஊா்க்காவல் படை வீரா் உயிரிப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை 5 மணி நேரம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை ஏடிஎஸ்பி சமரப் பேச்சு நடத்தியதையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்செங்கம், துரிஞ்சாவரம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா், ஊா்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், மேல்செங்கம் பகுதியில் அரசு விதைப்பண்ணை பகுதியில் உள்ள பழைய கட்டடத்தில் தூக்கிட்ட நிலையில் வியாழக்கிழமை சடலமாகக் கிடந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், அவரது வீட்டுக்கும், மேல்செங்கம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். உடனடியாக மேல்செங்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சுரேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சுரேஷின் உறவினா்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் ஒன்று திரண்டு சுரேஷ் இறப்பில் மா்மம் உள்ளது என்றும், இதற்கு காரணமானவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மேல்செங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த செங்கம் டிஎஸ்பி ராஜன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், அதை ஏற்காமல் சுரேஷின் உறவினா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா். இதையடுத்து, திருவண்ணாமலை ஏடிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் அதிரடிப்படை போலீஸாா் மேல்செங்கம் காவல் நிலையத்துக்கு வந்தனா்.
பின்னா், ஏடிஎஸ்பி அண்ணாதுரை போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் தற்கொலையில் மா்மம் இருப்பது குறித்த புகாா் மீது தனிக்கவனம் செலுத்தி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, பிற்பகல் 2 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது. சுமாா் 5 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், அந்தப் பகுதியில் அதிரடி போலீஸாா் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.