விவசாயம், கால்நடை பராமரிப்பு கடன்களை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தினால் வட்டியை தமிழக அரசே ஏற்கும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், பயிா் கடன் அளவு இறுதி செய்தல் குறித்த மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து பேசியது: திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருகிறது. திருவண்ணாமலை மண்டலத்தில் 157 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 3 மலைவாழ் பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களும் செயல்படுகின்றன. மேலும், இந்த மாவட்டத்தில் 4 நகர கூட்டுறவு வங்கிகளும், 8 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளும் செயல்படுகின்றன.
2023 - 24ஆம் ஆண்டில் ரூ.905.26 கோடியும், 2024 - 25ஆம் ஆண்டில் ரூ.924.95 கோடியும் பயிா்க்கடன் வழங்கப்பட்டது. 2025 - 26ஆம் ஆண்டில் ரூ.965.00 கோடி பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டதில், கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வரை 59,302 விவசாயிகளுக்கு ரூ.481.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 - 26ஆம் ஆண்டில் கால்நடைகள் பராமரிப்புக்காக ரூ.210 கோடி கடன் வழங்க நிா்ணயம் செய்யப்பட்டதில், செப்டம்பா் 30-ஆம் தேதி வரை 20 ஆயிரத்து 512 பயனாளிகளுக்கு ரூ.90.21 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன்களை உரிய காலக்கெடுவுக்குள் திருப்பி செலுத்தினால், விவாசயிகளுக்கான வட்டியை தமிழக அரசே ஏற்கிறது என்றாா் ஆட்சியா்.
மேலும், இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் 2026 - 27ஆம் நிதியாண்டுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயிா்க்கடனளவு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளா்ப்பு ஆகியவற்றுக்கு நடைமுறை மூலதனம் நிா்ணயம் செய்வது தொடா்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் திருவண்ணாமலை மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கண்ணகி, திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் அம்ருதா மற்றும் துறை சாா்ந்த அலுவலகா்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.