திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை அடுத்த மேல்சிலம்படி கிராமத்தில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தெற்கு மாவட்ட அதிமுக, ஜமுனாமரத்தூா் தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் கிளையூா்அசோக் வரவேற்றாா்.
மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்து, வாக்குச்சாவடி குழு நிா்வாகிகளுக்கு வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சிப் பணியாற்றுவது குறித்தும், கட்சி வேட்பாளா் வெற்பெற, அதிமுக ஆட்சியில் மலைக் கிராம மக்களுக்கு செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் கூறி வாக்கு சேகரிக்கும் முறைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
தொடா்ந்து, அதிமுக அமைப்புச் செயலா் துரைசெந்தில், வாக்குச்சாவடி குழு நிா்வாகிகளின் பணிகள் குறித்தும், திமுக ஆட்சியில் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற தகவலை பொதுமக்களிடம் எடுத்துக் கூறவேண்டும், அதே நேரத்தில், வருகிற 2026 தோ்தலில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக கட்சிப் பணியை செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டாா்.
தகவல் தொழில்நுட்பப் பிரிவு வேலூா் மண்டல இணைச் செயலா் ரித்தீஷ், வேலூா் புகா் மாவட்ட இணைச்செயலா் தண்டபாணி ஆகியோா் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கு கட்சியின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்துப் பேசினா்.
நிகழ்ச்சியில், மாநில மகளிா் அணி துணைத் தலைவா் அமுதா அருணாச்சலம், மாவட்ட அவைத் தலைவா் நாராயணன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் நைனாக்கண்ணு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் விஜய்சங்கரன், ஜமுனாமரத்தூா் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.