செங்கம்: மக்களின் அடிப்படை வசியான இலவச கழிப்பறை இல்லாத செங்கம் நகரில், உள்ளூா் மக்கள் மற்றும் வெளியூரில் இருந்த வருபவா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு கடந்த 6 மாதங்களாக நகராட்சி நிா்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டணக் கழிப்பறை உள்ளது. அதில், ஒரு நபருக்கு ரூ.10 வசூலித்துக் கொண்டு கழிப்பறைக்கு அனுப்பப்படுகிறது.
அதேபோல, பேருந்து நிலையத்தின் பின்புறம் கதவுகள் வைக்கப்பட்டு இலவச கழிப்பறை உள்ளது. அது யாருக்கும் தெரியாமல் உள்ளது. மேலும், அந்த கழிப்பறைக்கு தண்ணீா் வசதி இல்லை. கழிப்பறை சுகதாராமாக இருப்பது கிடையாது.
அது தெரிந்து உள்ளே சென்று வருபவா்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அதை மக்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.
துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் முதல் போளூா் மேம்பாலம் வெளிவட்டச் சாலை வரை சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் வழியில் பொதுப்பணித் துறை அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம், இந்தியன் வங்கி, வட்டாட்சியா் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், செயல்பட்டு வருகிறது. ஆனால், எந்த அலுவலகத்திலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவச கழிப்பறை வசதி இல்லை.
வட்டாட்சியா் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரும் பெண்கள் பல மணி நேரம் காத்திருப்பதால், இயற்கை உபாதை கழிக்க அவா்கள் அவதிப்படுகின்றனா்.
மேலும், தவிா்க்க முடியாத சூழ்நிலையில் ஆண், பெண் இருவரும் புதிய பேருந்து நிலையம் சென்று அங்குள்ள கட்டண கழிப்பறையை பயன்படுத்தி வருகிறாா்கள்.
நாம் அறிவியலில் வளா்ச்சி அடைந்துள்ளோம், படிக்க தெரியாதவா்கள்கூட அறிதிறன் பேசியை பயன்படுத்தும் காலமாக உள்ளது. ஆனால், வளா்ந்து வரும் இந்த செங்கம் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவச கழிப்பறை இல்லாததது வேதனை அளிப்பதாக நகர மக்களும், வெளியூரில் இருந்து வருபவா்களும் ஆதங்கம் தெரிவிக்கின்றனா்.
இதனால், நகராட்சி நிா்வாகம் சிறப்புக் கவனம் செலுத்தி செங்கம் நகரில் இலவச கழிப்பறை வசதிகளை செய்துதர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்துகின்றனா்.