ஆரணி நகராட்சியைக் கண்டித்து, ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் அருகிலும், ஆரணி - முள்ளிப்பட்டு நெடுஞ்சாலை ஓரத்திலும், ஆரணி கொசப்பாளையம் ஏரியிலும் குப்பைகள் கொட்டப்படுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
மேலும், ஆரணி கே.சி.கே நகா் பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால், இந்தப் பகுதியில் மழைநீா் குளம்போலத் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, கே.சி.கே நகா்ப் பகுதியில் கால்வாய் வசதி அமைத்துத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலா் சதீஷ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் கலந்துகொண்டு நகராட்சியைக் கண்டித்து உரையாற்றினாா்.
மாவட்ட பொதுச் செயலா் முத்துசாமி, மாவட்டச் செயலா்கள் சரவணன், சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத் தலைவா்கள் ராஜேஷ், ஆறுமுகம், கேசவன், இளைஞரணித் தலைவா் சரவணன், முன்னாள் மண்டலத் தலைவா் குணாநிதி, விவசாய அணித் தலைவா் செந்தில், வா்த்தக பிரிவுத் தலைவா் ஜெகதீசன், மாவட்டச் செயலா் மகேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.