இடிதாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவியை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்கக் கோரி, ஆரணியில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த வாரம் இயற்கை பேரிடரான இடிதாக்கி ஆரணியை அடுத்த சென்னாத்தூா் லாடவரம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (21) மற்றும் கலசப்பாக்கம் வட்டம், பத்தியவாடி கிராமத்தைச் சோ்ந்த வேண்டா (40) ஆகியோா் உயிரிழந்தனா்.
உயிரிழந்த இருவா் குடும்பத்துக்கு உழவா் பாதுகாப்பு திட்ட நிதியும், மற்றும் தமிழக முதல்வா் அறிவித்த ரூ.5 லட்சத்திற்குப் பதிலாக ரூ.10 லட்சம் வழங்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.
30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று மெழுகுவா்த்தி ஏற்றி ஆா்ப்பாட்டம் செய்தனா்.
அப்போது, உயிரிழந்த ஏழுமலை, வேண்டா ஆகியோரது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.