வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் முதல் தலைமுறை மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது: வாக்காளர் பட்டியலில் 18 முதல் 21 வயது வரையிலான முதல் தலைமுறை வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க ஜூலை 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை அனைத்து வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதவிர அரசு விடுமுறை நாளான ஜூலை 9, 23 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் 1,627 வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்க்கும் பணி நடைபெறும். மேலும், www.elections.tn.gov.in என்ற தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இப்பணிகளைக் கண்காணிக்க 224 மேற்பார்வை அலுவலர்களும், ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் நியமனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதியளித்திருப்பதால், அரசியல் கட்சியின் முகவரை நியமனம் செய்து அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வராஜ், ராஜலட்சுமி, தேர்தல் வட்டாட்சியர் விஜயகுமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.