போதைப் பழக்கம் கூடாது என்ற குறிக்கோளுடன் மாணவர்கள் திகழ வேண்டும் என, தமிழக காவல் துறை குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி சுனில்குமார் வலியுறுத்தினார்.
விஐடி பல்கலைக்கழகத்தின் 2017-18-ஆம் ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தொடக்கம், புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாணவர் பேரவையைத் தொடங்கி வைத்து தமிழக காவல் துறை குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி சுனில்குமார் பேசியதாவது:
மாணவர்களாகிய உங்களுக்கு அடுத்து வரும் காலங்களில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். இதற்கு போதைப் பழக்கம் தடையாக இருக்கும். இப்பழக்கத்தால் குடும்பம், நண்பர்கள், பணம் ஆகியவற்றை இழக்க நேரிடும். போதைப் பழக்கம் கூடாது என்ற குறிக்கோளுடன் இருக்க வேண்டும்
என்றார்.
விழாவுக்கு தலைமை வகித்து விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
இந்தியாவில் 24 சதவீதம் பேர் மட்டுமே உயர் கல்வி பெறுகின்றனர். அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஐடி பல்கலை. கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, உடல் ஆரோக்கியம், ஒழுக்கம், கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானது. மாணவர்களிடம் கட்டுப்பாடு, ஒழுக்கம் இருந்தால் தான் அதைப் பெற முடியும் என்றார்.
நிகழ்ச்சியில், மாணவர் பேரவை நிர்வாகிகளாக 24 பேர் பொறுப்பேற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், வழக்குரைஞர் டி.எம்.
விஜயராகவலு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் பிரபாகர் ராஜ், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் பேரவைச் செயலாளர் அஜய் பாஸ்கர் நன்றி
கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.