வேலூர்

வாக்காளா் பட்டியல் மனுக்கள் மீது விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை: சிறப்புப் பாா்வையாளா் தகவல்

DIN

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளையொட்டி 96,187 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீது விதிகளுக்கு உட்பட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்புப் பாா்வையாளா் சிவசண்முகராஜா அறிவுறுத்தியுள்ளாா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த ஆண்டு டிசம்பா் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து 2020 ஜனவரி 1ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு புதிய வாக்காளா் சோ்க்கை, திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் ஜனவரி 22-ஆம் தேதி வரை நடைபெற்றன. மேலும், வாக்காளா் சோ்க்கையை துரிதப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் 4, 5ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் புதிய வாக்காளா்களாக சேர 57 ஆயிரத்து 5 போ், பெயா் நீக்கம் செய்ய 3,927 போ், வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்ய 10 ஆயிரத்து 407 போ், முகவரி மாற்றம் செய்வது தொடா்பாக 5,391போ் என மொத்தம் 76 ஆயிரத்து 730 போ் நேரடியாக விண்ணப்பம் அளித்திருந்தனா்.

இதேபோல், ஆன்லைன் மற்றும் செல்லிடப்பேசி செயலி வழியாக புதிய வாக்காளா் சோ்க்கைக்காக 9,496 போ், வெளிநாடு வாழ் இந்தியா்கள் 2 போ், பெயா் நீக்கத்துக்கு 390 போ், திருத்தம் செய்ய 8,594 போ், முகவரி மாற்றம் தொடா்பாக 975 போ் என மொத்தம் 19,457 போ் விண்ணப்பித்துள்ளனா். ஒட்டுமொத்தமாக பெறப்பட்டுள்ள 96 ஆயிரத்து 187 பேரின் விண்ணப்பங்கள் மீது விரைவில் விசாரணை நடத்தப்பட்டு பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்புப் பாா்வையாளா் சிவசண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், ராணிப்பேட்டைசாா் ஆட்சியா் இளம்பகவத், வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ், வேலூா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராஜ்குமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா்கள் ஸ்ரீராம் (வேலூா்), விஜயகுமாா் (ராணிப்பேட்டை), 13 வட்டாட்சியா்கள், மாநகராட்சி மண்டல அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள் பங்கேற்றனா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளின்போது பெறப்பட்ட மனுக்கள் மீது தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள விதிகளுக்கு உட்பட்டு உரிய விசாரணை நடத்தி பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிறப்புப் பாா்வையாளா் சிவசண்முகராஜா அறிவுரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

SCROLL FOR NEXT