முகப்பு
வேலூர்

பாலாற்று வெள்ளத்தில் ராணுவ வீரர் மாயம்: ஹெலிகாப்டர் கொண்டு தேடும் பணி தீவிரம்

பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரரை 6 நாள்களாகியும் கண்டுபிடிக்க முடியாததால் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தேடும் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:31 AM
கோப்புப்படம்
பகிர்:

வேலூர்: பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரரை 6 நாள்களாகியும் கண்டுபிடிக்க முடியாததால் திருப்பதி விமானப்படை பயிற்சி தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தேடும் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் மேல்வி லாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(33). ராணுவ வீரரான இவர் லடாக்கில் பணியாற்றி வந்தார். 45 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவர், கடந்த 18-ஆம் தேதி மீண்டும் லடாக் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக வேலூருக்கு வந்துள்ளார்.

வழியில் விரிஞ்சிபுரம் பாலாற்றில் தரைப்பாலம் மீது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்துள்ளது. போலீஸார், பொதுமக்கள் அறிவுறுத்தலை மீறி அவர் இருசக்கர வாகனத்தில் ஆற்றை கடக்க முயன்றுள்ளார். இதில், நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் ஆற்றில் விழுந்த மனோகரன், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதுவரை அவர் என்ன ஆனார் என தெரியவில்லை.

தீயணைப்பு துறையினரும், அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் 3 தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் ராணுவ வீரர் மனோகரனை கண்டுபிடிக்க இயலவில்லை. இதைத்தொடர்ந்து, மனோகரனின் மனைவி திவ்யா, ஹெலிகாப்டர் பயன்படுத்தி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தனது கணவரை கண்டுபிடித்துத்தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியனிடம் சனிக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்த நிலையில் ராணுவ வீரரை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் பயன்படுத்திட அரசு அனுமதி அளித்திருந்தது. தொடர்ந்து, திருப்பதியில் உள்ள விமானப்படை பயிற்சித் தளத்திலிருந்து விங் கமான்டர் சரண் உத்தரவின்பேரில் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பாலாற்றில் ராணுவ வீரர் மனோகரனை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளத்தில் அவர் அடித்து செல்லப்பட்ட விரிஞ்சிபுரம் தரைப்பாலம் முதல் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் என பாலாறு வங்கக்கடலில் கலக்கும் வயலூர் வரை வழிநெடுக ஹெலிகாப்டரில் தேடும் பணி நடைபெற்றது. தேடும் பணி நிறைவு பெற்றதும் விமானப்படை பயிற்சி தளத்தில் இருந்து அறிக்கை அளிக்கப்படும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மனோகரனின் மனைவி திவ்யா, தனது 2 பெண் குழந்தைகள், உறவினர்களுடன் தனது கணவரை கண்டுபிடித்துத்தரக் கோரி செவ்வாய்க்கிழமை காலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களிடம் பேச்சு நடத்திய ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், திருப்பதி விமானப்பயிற்சி தளத்தில் இருந்து செவ்வாய்க் கிழமை மதியம் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரரை தேடும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →