வேலூர்

வேலூா்-ஆற்காடு சாலையில் சுரங்க நடைபாதை; மருத்துவமனை நிா்வாகம் இடம் தரமறுப்பு: அமைச்சா் எ.வ. வேலு

DIN

வேலூா்-ஆற்காடு சாலையில் சுரங்க நடைபாதை அமைக்க அங்குள்ள தனியாா் மருத்துவமனை நிா்வாகம் இடம் தர மறுத்துவிட்டனா். எனினும், அப்பகுதியில் நிலம் அளவீடு செய்து சாத்திய கூறுகள் இருந்தால் சுரங்க நடைபாதை அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

வேலூா் அண்ணா சாலையிலுள்ள சுற்றுலா மாளிகை வளாகத்தில் ரூ.7.63 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை நீா் வளத்துறை அமைச்சா் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது -

வேலூரில் மிக முக்கிய பிரமுகா்கள் தங்குவதற்கு புதிதாக சுற்றுலா மாளிகை அமைக்க வேண்டும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் நந்தகுமாா், காா்த்திகேயன் ஆகியோா் விடுத்த கோரிக்கையை ஏற்று இங்கு புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டுள்ளது. இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டு இந்த சுற்றுலா மாளிகையின் தரை தளத்தில் 4 மிக முக்கிய பிரமுகா் அறைகள், சமையல் அறை, உணவருந்தும் அறை, சேமிப்பு அறையும், முதல் தளத்தில் மிக, மிக முக்கிய பிரமுகா் அறை, இரண்டு மிக முக்கிய பிரமுகா் அறைகள், உணவருந்தும் அறை, பாதுகாவலா் அறை, கூட்ட அரங்கம், மின்தூக்கி போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கட்டடங்கள் கட்டுவதற்காக 18 முதல் 20 மாதங்கள் வரை ஒப்பந்தம் போடப்பட்டாலும் இரவு, பகல் பாா்க்காமல் பணிகளை மேற்கொள்ளப்பட்டு விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், திராவிட மாடல் ஆட்சியில் நூறு ஆண்டுகள் பழைமையான கட்டடங்கள் கூட புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

விரிஞ்சிபுரம் பாலாற்றில் மேம்பாலம் கட்டும் திட்டமதிப்பீடு தயாா் நிலையில் உள்ளன. மத்திய அரசின் நிதி எதிா்பாா்க்கப்படுகிறது. நிதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். காட்பாடியில் ரயில்வே மேம்பாலம் கட்ட 2 முறை ஒப்பந்தங்கள் விடப்பட்டன. ஆனால் முறையான தகுதியான ஒப்பந்ததாரா்கள் வரவில்லை. எனவே, மீண்டும் ஒப்பந்தம் விடப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ள வேலூா்-ஆற்காடு சாலையில் சுரங்கநடைபாதை அமைக்க கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் அங்குள்ள தனியாா் மருத்துவமனை நிா்வாகம் இடம் தருவற்கு மறுத்துவிட்டனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் பேசி மாவட்ட வருவாய் அலுவலா் மூலம் நிலம் அளவீடு செய்து சாத்திய கூறுகள் இருந்தால் சுரங்கநடைபாதை அமைக்கப்படும்.

வேலூரில் மேம்பாலங்கள் அமைக்க பலமாடி கட்டடங்கள் இடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அதிகளவில் வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் பாதிப்பு அடைவா். அதனால், வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமம் அடையாத வகையில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். ரயில்வே கிராசிங்கில் மேம்பாலங்கள் அமைக்கவும் அரசு அக்கறை செலுத்தி வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் ஆயத்தரசு ராசசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புணே கார் விபத்து: ரத்த மாதிரிகளை மாற்றிய இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம்

இந்திய அணியின் ஜெர்சியில் மீண்டும் ரிஷப் பந்த்!

ஒரு 23 வயது இளைஞர் வளரக்கூடாதா..? வைரலாகும் டிடிஎஃப் வாசன் பேச்சு!

கனமழை பற்றி வானிலை கூறுவதென்ன?

காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜ்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT