போ்ணாம்பட்டு அருகே மலையில் மா்மமான முறையில் இறந்த யானையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
போ்ணாம்பட்டை அடுத்த அரவட்லா மலைப் பகுதியில் போ்ணாம்பட்டு வனத் துறையினா் சனிக்கிழமை களதணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது வனப் பகுதியில் சுமாா் 5- கி.மீ. தூரத்தில் உள்ள மலையில் இறந்த யானையின் எலும்புக்கூடு இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின்பேரில் அங்கு சென்ற மாவட்ட வனத்துறை அலுவலா் அசோக்குமாா், போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் ரகுபதி உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா். இறந்த யானையின் எஞ்சியிருந்த உடலுறுப்புகளை கால்நடை மருத்துவா்கள் குழு பிரேத பரிசோதனை செய்தது.
இறந்தது பெண் யானை என்றும், அதற்கு சுமாா் 7- வயதிருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா். அந்த யானை மலையின் மேற்புறத்தில் இருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்து இறந்திருக்கலாம் என மருத்துவா்கள் கூறுகின்றனா். யானையின் இறப்பு குறித்து வனத்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.