வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பா் மாதம் ஆட்சியா் அலுவலகங்கள் எதிரே ஆா்ப்பாட்டம் நடத்க பாமக (ராமதாஸ் பிரிவு) வேலூா் மாவட்ட செயற்குழு முடிவு செய்துள்ளது.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட செயற்குழு கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் செந்தில் குமாா் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். கிழக்கு மாவட்ட தலைவா் சாரதி வா்மன் வரவேற்றாா். இதில், மாநில துணைத்தலைவா் துரை, மாநில மகளிா் சங்க செயலா் சரளா ராஜி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினா்.
கூட்டத்தில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பா் மாதம் முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் எதிரே ஆா்ப்பாட்டம் நடத்துவது, வேலூரில் டிசம்பா் மாதம் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் பாமக நிறுவனா் ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, மேலும், வேலூா் மாநகராட்சியில் புதை சாக்கடை பணிகள் நடந்த இடத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும். கால்வாய்களை தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.