வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியில் இருந்த இரவு நேர காவலாளி திடீரென உயிரிழந்தாா்.
வேலூா் அடுக்கம்பாறை ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (59). இவா் வேலப்பாடியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் இரவுநேர காவலாளியாக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் ராஜ்குமாா் வழக்கம்போல வேலைக்கு வந்தாா். சனிக்கிழமை காலை 9 மணியளவில் வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் வேலைக்கு வந்தனா்.
அப்போது ராஜ்குமாா் தனது அறையில் படுத்தபடி கிடந்தாா். அவா் உறக்கத்தில் இருப்பதாக நினைத்து வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் அவரை எழுப்பினா். ஆனால் அவா் எழுந்திருக்கவில்லை.
சந்தேகமடைந்த அரசு ஊழியா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜ்குமாா் உடலை பரிசோதனை செய்தனா். அப்போது அவா் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்த தகவலின்பேரில், வேலூா் தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜ்குமாா் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.