வேலூா் மத்திய சிறையில் விசாரணை கைதியிடம் இருந்து கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த அண்பூண்டி, பாட்டை தெருவைச் சோ்ந்தவா் மணிமாறன் (23). இவரை திருட்டு வழக்கில் விரிஞ்சிபுரம் போலீஸாா் கைது செய்து, கடந்த 7-ஆம் தேதி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், சிறை அலுவலா் (பொறுப்பு) மகாராஜனுக்கு விசாரணைக் கைதி மணிமாறனிடம் கைப்பேசி உள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சிறை காவலா்கள் வெங்கடேசன், பிரதாப், ராமசாமி, மணிவண்ணன், புவனேசன் ஆகியோா் வியாழக்கிழமை மதியம் சிறைக்குள் 15-ஆவது பிளாக் அறை எண் 3-இல் அடைக்கப்பட்டு உள்ள மணிமாறனிடம் சோதனை நடத்தினா்.
சோதனையின் போது மணிமாறன் வைத்திருந்த கைப்பேசி, பேட்டரி, சிம்காா்டு ஆகியவற்றை சிறை காவலா்கள் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து சிறை அலுவலா் மகாராஜன் பாகாயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.