முகப்பு
கோயம்புத்தூர்

பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு போக்குவரத்துக் கழகம் ரூ. 12 கோடி நிலுவை!

கோவை, டிச. 30: அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் கூட்டுறவு சிக்கனக் கடன் சங்கத்துக்கு ரூ. 12 கோடியை போக்குவரத்துக் கழகம் நிலுவை வைத்துள்ளது. இதனால் கடன் பட்டுவாடாவில் தாமதம் ஆவதோடு, புதிய கடன் திட்டங்க

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:44 PM
பகிர்:

கோவை, டிச. 30: அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் கூட்டுறவு சிக்கனக் கடன் சங்கத்துக்கு ரூ. 12 கோடியை போக்குவரத்துக் கழகம் நிலுவை வைத்துள்ளது. இதனால் கடன் பட்டுவாடாவில் தாமதம் ஆவதோடு, புதிய கடன் திட்டங்களையும் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப ஊழியர், இளநிலை பொறியாளர், அலுவலகப் பணியாளர்கள் உள்பட 12 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இப் பணியாளர்களுக்காக கூட்டுறவு பண்டக சாலை, வீட்டு வசதி சங்கம், பணியாளர் கூட்டுறவு சிக்கனக் கடன் சங்கம் செயல்பட்டுவருகிறது.

 கோவையில் சேரன் காலனி, சேரன் மாநகர், பொள்ளாச்சி, வால்பாறை, உதகை ஆகிய இடங்களில் கூட்டுறவு பண்டகசாலை உள்ளது. இதன் மூலமாக மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

 கோவை உப்பிலிபாளையம் டெப்போ வளாகத்தில் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனக் கடன் சங்கம் 36 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இதில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு பிணையக் கடனாக ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. குறைந்த வட்டிக்கு வழங்கப்படும் இக் கடன் தொகை, சம்பளத்திலேயே மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு சங்கத்தின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

 இந் நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக கடனுக்காக ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ. 12 கோடியை போக்குவரத்துக் கழக நிர்வாகம் சங்கத்துக்கு வழங்கவில்லை. இதனால், சங்கச் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டச் செயலர் எம்.சண்முகம் கூறியது:

 ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை ரூ. 12 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரத்தை வழங்காமல் கடந்த 2008-லிருந்து நிர்வாகம் நிலுவை வைத்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கு பிணையக் கடன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. நுகர்பொருள் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. கடன் சங்க லாபத்தில் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஈவுத் தொகை வழங்கப்படும். ஆனால், தற்போது அதுவும் தடைப்பட்டுள்ளது.

 வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது பெரும் சவாலாக இருப்பதால், கடன் சங்கங்களின் மூலமாகவே கல்விக் கடன் வழங்கலாம் என சில மாதங்களுக்கு முன்பு நடந்த மகாசபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், சங்கத்தில் போதிய நிதி இல்லாத காரணத்தால் அத் திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை என்றார்.

 இதுபற்றி சிக்கன கடன் சங்க நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, கோவை மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் கூட்டுறவு சங்கம் என்ற பெயரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இச் சங்கம் பெற்றிருந்தது. பிணையக் கடனுக்காக விண்ணப்பித்த ஒரே நாளில் ஊழியர்களுக்கு கடன் வழங்கிய காலமும் இருந்தது. போக்குவரத்துக் கழகம் ரூ. 12 கோடி நிலுவை வைத்திருப்பதால், கடன் பட்டுவாடா உடனுக்குடன் செய்ய முடியவில்லை. 100-க்கும் மேற்பட்ட கடன் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. 2006-லிருந்து உறுப்பினர்களுக்கு ஈவுத் தொகை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

 இதுகுறித்து அரசுப் போக்குரவத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது மாதந்தோறும் சிக்கனக் கடன் சங்கத்துக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்கி வருகிறோம். இதன் மூலம் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது என்றனர். ஆனால், நிலுவைத் தொகை பற்றி தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →