முகப்பு
கோயம்புத்தூர்

கோவை ரயில் நிலையத்தில் வாலாங்குளம் நீர் விநியோகம்: ரயில் பயணிகளின் சுகாதாரம் கேள்விக்குறி

கோவை, பிப். 18: கோவை வாலாங்குளத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் எந்த சுத்திகரிப்பும் இல்லாமல் கோவை ரயில்நிலையத்தில் குடிநீராக வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. ரயில் பயணிகளின் சுகாதாரம் இதனால் கேள்விக்க

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:33 PM
பகிர்:

கோவை, பிப். 18: கோவை வாலாங்குளத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் எந்த சுத்திகரிப்பும் இல்லாமல் கோவை ரயில்நிலையத்தில் குடிநீராக வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. ரயில் பயணிகளின் சுகாதாரம் இதனால் கேள்விக்குறி ஆகியுள்ளது.  

  கோவை ரயில் நிலையத்தில் 7 பிளாட்பாரங்கள் உள்ளன. இவற்றில் பயணிகளின் வசதிக்காக 48 குடிநீர்க் குழாய்கள் உள்ளன. இக் குழாய்களில் வரும் தண்ணீரை குடிநீராக ரயில் பயணிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் அது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அல்ல; வாலாங்குளத்து தண்ணீர்தான் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கழிவுநீர் சங்கமம்: கோவையில் பகுதியிலுள்ள குளங்கள் அனைத்துமே, சாக்கடைக் கழிவுநீர் கலந்து மாசுபட்டுக் காணப்படுகின்றன. கோவை நகரின் சாக்கடை நீரில் பெரும்பகுதி வாலாங்குளத்தில் சேகரமாகிறது. அதற்கு அருகில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தும் ரயில்வே நிர்வாகம், அத் தண்ணீரை சுத்திகரிப்பு ஏதும் செய்யாமலேயே ரயில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்கிவருகிறது.

வாலாங்குளத்தை நேரில் பார்க்கும் மக்கள், குளத்துத் தண்ணீரை தொடக் கூட மாட்டார்கள். ஆனால், குழாய் மூலம் வாலாங்குளத்து தண்ணீர்தான் வருகிறது என்பது தெரியாத நிலையில், ரயில்களிலும், ரயில்வே பிளாட்பாரங்களிலும் ரயில் பயணிகள் இதையேதான் பயன்படுத்துகின்றனர்.

ரயில்வே பிளாட்பாரங்களில் உள்ள குடிநீர்க் குழாய்களில் பெரும்பாலான சமயங்களில் வாலாங்குளத்துத் தண்ணீரே விநியோகம் செய்யப்படுவதாக, ரயில்வே ஊழியர்கள் பலர் தெரிவித்தனர்.

மாநகராட்சி மூலமாக சிறுவாணி குடிநீர் வடகோவை ரயில் நிலையத்திற்கு வழங்கப்படுகிறது. அங்கிருந்து, போத்தனூர் ரயில்வே குடியிருப்பு, கோவை ரயில்வே குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அந்தத் தண்ணீர் ரயில்வே பிளாட்பாரங்களில் விநியோகம் செய்யப்படுவதில்லை.

  ரயில்வே பிளாட்பாரங்கள் 1, 1ஏ, 2ல் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், 3 மற்றும் 4ல் உள்ள குடிநீர் குழாய்களில் சாதாரண தண்ணீர்  விநியோகம் செய்யப்படுவதாகவும், 5,6 பிளாட்பாரங்களில் குடிநீர் வசதிக்காக பணிகள் நடைபெற்றுவருவதாகவும், ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ரயில்வே பிளாட்பாரங்களில் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனினும், மாநகராட்சி தினமும் வழங்கும் 8 லட்சம் லிட்டர் குடிநீர் போதுமானதல்ல. குடிநீர் பற்றாக்குறையாகவே உள்ளது. மாநகராட்சி குடிநீர் வழங்காத நாள்களில், பிளாட்பாரங்களில் சாதாரண தண்ணீர் வழங்கப்படுகிறது (வாலாங்குளத்து தண்ணீர்) என்றார்.

ஆண்டுக்கு ரூ. 75 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டித் தரும் கோவை ரயில் நிலையத்தில், மக்கள் குடிப்பதற்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக வாலாங்குளத்து தண்ணீர் தான் குடிநீராக விநியோகிக்கப்படுகிறது என்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ரயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது?

ஆழ்குழாய்க் கிணறு

 ரயில் பெட்டிகளைக் கழுவுவதற்காகவும், ரயில் கழிவறைகளுக்கு தண்ணீர் நிரப்பவும்,வாலாங்குளம் பகுதியில் ரயில்வே நிர்வாகம் ஆழ்குழாய் அமைத்து மேல்நிலைத் தொட்டி மூலமாக தண்ணீரைக் கொண்டுவருகிறது. குளத்திலிருந்து, தினமும் 16 மணி நேரம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பணிமனை வளாகத்தில் உள்ள மேல்நிலைத் தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு, ரயில் பெட்டிகள் கழுவப்படுகின்றன. ரயில்வே அதிகாரிகள் ரெஸ்ட் ஹவுஸ் பகுதியிலுள்ள இரு இரும்புத் தொட்டிகளும் இதே பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.

  கோவையிலிருந்து புறப்படும் ரயில்கள் தினசரி இத் தண்ணீரால் தான் கழுவப்படுகின்றன. அத்துடன், இந்த ரயில்களின் தண்ணீர் டேங்க்கிலும் இந்தத் தண்ணீர் நிரப்பப்படுகிறது. ரயில் பெட்டிகளில் கழிவறைக்குப் பயன்படும் இதே தண்ணீர் தான், ரயிலில் உள்ள வாஷ்பேசினிலும் விநியோகிக்கப்படுகிறது. இதை குடிநீர் என்று கருதி குடிப்பவர்களும் உண்டு; பல் துலக்குவதற்கும் இதே தண்ணீர் தான்.

கோவை- சென்னை இடையே இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள், துரந்தோ அதிவேக எக்ஸ்பிரஸ், கோவை- மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வாலாங்குளத்து தண்ணீர்தான் நிரப்பப்படுகிறது.

கோவை- நாகர்கோயில், கோவை- மங்களூர், கோவை- திருச்சூர், கோவை-மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில்களுக்கும் இதே தண்ணீர் தான் விநியோகம் செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →