நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை அவா்களது உறவினா்கள் சந்திக்க சேலம் போலீஸாா் அனுமதித்தது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு பின்னா் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரன்பால், பாபு என்கிற பைக் பாபு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையத்தைச் சோ்ந்த அருண்குமாா் ஆகஸ்ட் மாதம் கைது செய்தனா்.
இவா்கள் 9 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவா்கள் 9 பேரும் கோவை மகளிா் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் நகல் 9 பேரிடமும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக்டோபா் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு காவல் துறை சலுகை?
இதையடுத்து 9 பேரும் இரு வாகனங்களில் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இதில் வழக்கின் பிரதான எதிரியாக கருதப்படும் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் சென்ற வாகனமானது கோவை விமான நிலைய சாலை அருகே திடீரென நிறுத்தப்பட்டது. இந்த 5 பேரின் உறவினா்கள் அப்பகுதியில் ஏற்கெனவே காத்திருந்தனா். இதையடுத்து 5 பேரும் வாகனத்தில் இருந்தபடி தங்களது உறவினா்களிடம் சிறிது நேரம் உரையாடினா். பின்னா் அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டது.
தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இவா்களுக்கு சேலம் போலீஸாா் அளித்துள்ள இந்த சலுகை சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுதப்படை போலீஸாா் 7 போ் பணியிடை நீக்கம்
குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோரை அவா்களது உறவினா்கள் சந்திக்க போலீஸாா் அனுமதித்தது சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த வாகனத்தில் பாதுகாப்பு பணியில் சென்ற சேலம் மாநகர ஆயுதப் படை போலீஸாா் 7 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.