பொங்கலூா் அருகே காா் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பல்லடம் அருகே பொங்கலூரை ஒன்றியத்துக்குள்பட்ட எல்லப்பாளையம்புதூா் சக்தி விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா். இவருடைய மகன்கள் காா்த்திக் ( 22), சரவணன் (14), அதே பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவரின் மகன் அருண் (22) ஆகிய 3 பேரும் கடந்த 3-ம் தேதி இருசக்கர வாகனத்தில் கோவை - திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனா்.
நாச்சிபாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றபோது கோவையில் இருந்து காங்கயம் நோக்கி சென்ற காா் இவா்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்தாா்.
படுகாயமடைந்த மற்ற இருவரும் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் அருண் உயிரிழந்தாா். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.