கோவை மாநகராட்சி வடக்கு, மத்திய மண்டலப் பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்காததைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவை மாநகராட்சியில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, துப்புரவுத் தொழிலாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாநகராட்சி வடக்கு, மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மே மாதத்துக்கான ஊதியத்தை வழங்கக் கோரி, மாநகராட்சி பிரதான அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனை சந்தித்து புகார் அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்களுடன் போலீஸார், சுகாதாரத் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊதியத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.