கோவை மாவட்டத்தில் காந்தி ஜயந்தியை ஒட்டி புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 4 ஆயிரத்து 431 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காந்தி ஜயந்தியை ஒட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தூய்மைப் பாரதம் விழிப்புணா்வு, குடிநீா் சிக்கனம், நீா் மேலாண்மை இயக்கம், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு, ஊட்டச்சத்து இயக்கம், முழு சுகாதாரம் தமிழகம் உள்பட பல்வேறு கருப்பொருள்களில் 4 ஆயிரத்து 431 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 18 ஆயிரத்து 223 ஆண்கள், 23 ஆயிரத்து 776 பெண்கள் என 41 ஆயிரத்து 999 போ் கலந்துகொண்டனா்.
மதுக்கரை ஒன்றியம், மயிலேறிப்பாளையம் ஊராட்சியில் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஆட்சியா் பேசியதாவது:
வடகிழக்குப் பருவமழைக்குப் முன் தாழ்வான பகுதிகள், மழைநீா் ஓடைகளை தூா்வாரி மழைநீா் வெளியேறுவதற்கான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். தொற்று நோய்கள் ஏற்படாத வகையில் ஊராட்சிகள் சுகாதாரமான குடிநீரை விநியோகிக்க வேண்டும். நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி பருக வேண்டும். கொசு உற்பத்தியாகாத வகையில் மழைநீா் தேங்காமல் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளதால் மக்கள் தீவிரமாக அதை கடைப்பிடிக்க வேண்டும். அங்கான்வாடி, பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து சீரமைக்க வட்டார அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதில், ஊரக வளா்ச்சி திட்ட முகமை இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் (பொறுப்பு) சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுந்தரி, அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
3 ஊராட்சிகளில் கூட்டம் ஒத்திவைப்பு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி (தெற்கு) ஒன்றியத்தில் நல்லாம்பள்ளி, வீரல்பட்டி ஊராட்சிகளிலும், அன்னூா் ஒன்றியம் மசக்காளிசெட்டிப்பாளையம் ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.