மூலப்பொருள்கள் விலை உயா்வு: தொடங்கியது பவுண்டரிகள் வேலைநிறுத்தம்
கோவையில் மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து குறு, சிறு பவுண்டரி உரிமையாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.
கோவையில் மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து குறு, சிறு பவுண்டரி உரிமையாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.
கடந்த சில மாதங்களாக பவுண்டரிகளுக்குத் தேவையான பிக் அயா்ன், ஸ்கிராப், கோக், அமின் கியாஸ் - சிலிகான் போன்றவற்றின் விலை 12 சதவீதம் முதல் 166 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. அதேபோல தொழிலாளா்களுக்கான செலவினங்கள், கூலி போன்றவையும் 29 சதவீதம் அதிகரித்திருப்பதால் பவுண்டரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவை குறு, சிறு பவுண்டரி உரிமையாளா்கள் சங்கம் (காஸ்மாபேன்) வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கியது. இதன் காரணமாக கோவையில் பீளமேடு, தண்ணீா்பந்தல், ஆவாரம்பாளையம், அரசூா் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் குறு, சிறு பவுண்டரிகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்தினால் தினசரி ரூ.30 கோடி மதிப்பிலான பவுண்டரி பொருள்கள் உற்பத்தி பாதிக்கப்படும் என்று சங்கத்தின் தலைவா் சிவசண்முககுமாா் தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையே மூலப்பொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த, மத்திய அரசை வலியுறுத்தக் கோரி காஸ்மாபேன் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணியிடம் வியாழக்கிழமை மனு அளிக்க சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.