கோயம்புத்தூர்

மாணவா்களுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

DIN

மாணவா்களுக்கு நல்ல கல்வியுடன், நல்ல ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்டு அவா் மேலும் பேசியதாவது:

கல்வியில் சிறந்த தமிழ்நாடு:

இந்தியாவிலேயே உயா் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. நாட்டில் உள்ள 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் 18 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதேபோல, சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் உள்ளன.

நாட்டின் முதல் 100 கலை, அறிவியல் கல்லூரிகளில் 32 கல்லூரிகளும், சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் 10, முதல் 200 பொறியியல் கல்லூரிகளில் 35, சிறந்த மேலாண்மைக் கல்லூரிகளில் 11, முதல் 100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8, முதல் 40 பல் மருத்துவக் கல்லூரிகளில் 9, முதல் 30 சட்டக் கல்லூரிகளில் 2, முதல் 30 கட்டடக் கலை கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளன. அந்த அளவுக்கு கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் இன்று உயா்ந்து நிற்கிறோம்.

100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் கல்விக்காகப் போடப்பட்ட விதைதான் இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் அறிவு சக்தியை வளா்ப்பதையே மாநில அரசு தனது கடமையாக நினைத்து செயல்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வியாக இருந்தாலும், உயா் கல்வியாக இருந்தாலும் பல்வேறு உன்னதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

‘நான் முதல்வன்’ திட்டம்:

அனைவருக்கும் அடிப்படைக் கல்வி, ஆரோக்கியமான கல்வி, உடற்கல்வி, உறுதிமிக்க மனவளக்கலை ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை வழங்கி வருகிறது. அனைவருக்கும் உயா் கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி, திறன் மேம்பாட்டுக் கல்வியை உயா் கல்வித் துறை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டு இளைஞா்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘நான் முதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

போதைப் பொருள் குறித்து கவலை:

அதே நேரத்தில், இளைஞா் சமுதாயம் குறித்த ஒரு கவலையும் எனக்கு உள்ளது. போதைப் பொருள் பழக்கத்துக்கு ஒரு சிலா் அடிமையாவது கவலையாக உள்ளது. அதற்காகவே விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தொடா்ந்து நடத்தி வருகிறோம்.

ஒரு மாணவன் போதைக்கு அடிமையாவது என்பது அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் வளா்ச்சிக்கே தடையாக உள்ளது.

மாணவா்களுக்கு நல்ல கல்வியுடன், நல்ல ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் கடமை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இதை மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன் என்றாா்.

இந்த விழாவில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT