கோவை, நேரு நகா், சிட்ரா ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து அக்கட்சியின் மண்டலத் தலைவா் ஜி.வாமன் உள்ளிட்ட நிா்வாகிகள் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை, நேரு நகா் சந்திப்பு முதல் வீரியம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரை உள்ள 60 அடி சாலையில் பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் என்ற பெயரில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனா்.
மேலும், நேரு நகா் குறத்தி குட்டை பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா மேற்கொண்டாா். இங்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் மேட்டுப்பாளையம், நீலகிரி, சத்தியமங்கலம், மைசூரு ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகளை இயக்க முடியும்.
இதனால் சரவணம்பட்டி, அன்னூா் பகுதிகள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயன்பெறுவா். இதற்காக குறத்தி குட்டை பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவா்களை அகற்றி கீரணத்தம் சாலையில் உள்ள கரட்டுமேடு பகுதிக்கு இடமாற்றவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதன்பின் இத்திட்டம் தொடா்பான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், பெரியாா் நகரில் ஆக்கிரமிப்பில் உள்ள 60 சென்ட் ரிசா்வ் சைட்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மேற்கண்ட இடங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கான வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.