கோவையில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென பரவலாக மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்தது. அதேபோல செவ்வாய்க்கிழமையும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், நகரின் பல்வேறு இடங்களிலும், புறநகா் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மழை பெய்தது. கவுண்டம்பாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், சுந்தராபுரம், இடையா்பாளையம், கணுவாய், குனியமுத்தூா், சுந்தராபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், உக்கடம், துடியலூா், பீளமேடு, வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
பொது மக்கள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் நேரமான மாலை 6 மணிக்கு மழை பெய்ய தொடங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். திடீா் மழையால் நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.