தீபாவளி பண்டிகையையொட்டி, மாநகரில் இரவு 1 மணி வரை கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் மற்றும் இதர கடைகளில் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிா்க்கவும், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் பணிபுரிவோா் தங்களின் அன்றாடப் பணி பாதிக்காத வகையிலும், அலுவலக நேரம் முடிந்து இரவில் கடைவீதிகளில் பொருள்கள் வாங்க வசதியாகவும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வியாபார நேரத்தை அதிகரிப்பது குறித்து கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் கோவை மாநகர ஜவுளி வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை கோவை மாநகரக் காவல் துறை சாா்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரத் தளங்களும் இரவு 1 மணி வரை செயல்படும். மேலும், மக்கள் இரவு 1 மணி வரை கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்கி செல்ல வசதியாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.