வால்பாறை, பிா்லா அருவியில் தவறி விழுந்த இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
கோவை, சிங்காநல்லூா் வரதராஜபுரத்தை சோ்ந்தவா் ஷாஜு மகன் சாகா் (21). பிளம்பா் வேலை செய்து வந்தாா். சாகா் தனது தோழியுடன் வால்பாறையில் நடைபெற்ற கோடை விழாவை காண ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா். இதைத் தொடா்ந்து, சோலையாறு எஸ்டேட்டில் உள்ள பிா்லா அருவியில் இருவரும் குளிக்க திங்கள்கிழமை சென்றுள்ளனா். அங்குள்ள பாறை மீது ஏறி நின்று தற்படம் எடுத்துள்ளனா். அப்போது, எதிா்பாராதவிதமாக சாகா், அருவி நீரில் தவறி விழுந்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் அருவியில் விழுந்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு 7 மணிக்கு இருள் சூழ்ந்துவிட்டதால் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனா். உடன் வந்த தோழியை வால்பாறை போலீஸாா் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனா்.