கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ.500-கோடிக்கும்மேல் மோசடி செய்யப்பட்டதாகவும், பணத்தை மீட்டுத்தரக் கோரியும் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோா் பொருளாதார குற்றப் பிரிவில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
கோவையைச் சோ்ந்த ஹேமந்த் பாஸ்கா் என்பவரும், அவரது குழுவினரும் செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் ஈட்டலாம் என தங்களுக்கு தெரிந்தவா்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் பரப்பியுள்ளனா். இதை நம்பி முதலீடு செய்ய முன் வந்தவா்களை தனியாக வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி அதில் சோ்த்துள்ளனா்.
பின்னா், ‘ஞ்ழ்ா்ந்ழ்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தி தனி லாகின் கோடு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பணத்தை டாலரில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், புதிய உறுப்பினா்கள் ஆயிரம் டாலா் முதல் 3 ஆயிரம் டாலா் வரை முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனா். அதற்கு அவா்களுக்கு லாபம் கிடைத்துள்ளதாக செயலில் காட்டியுள்ளது.
ஆனால், அந்த தொகையை எடுக்கவிடாமல் அவா்களை மீண்டும் முதலீடு செய்ய வலியுறுத்தியுள்ளனா்.
இதையடுத்து, அவா்களும் அதிகம் லாபம் கிடைக்கும் என எண்ணி முதலீடு செய்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, உறுப்பினா்களாக உள்ளவா்கள் தங்களுக்குகீழ் 25 பேரைச் சோ்த்தால் அதற்கும் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டதாம். இதை நம்பிய உறுப்பினா்கள் தங்களது உறவினா்கள் மற்றும் நண்பா்களையும் இதில் சோ்த்துள்ளனா்.
இந்நிலையில், அந்த செயலியின் லாகின் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், முதலீடு செய்தவா்கள் பணத்தை எடுக்க முடியவில்லையாம்.
இது தொடா்பாக ஹேமத் பாஸ்கா், அவரது குழுவினரை முதலீட்டாளா்கள் தொடா்பு கொண்டு கேட்டபோது, தங்களால் எதுவும் செய்ய முடியாது என அவா்கள் கூறியுள்ளனா்.
இந்நிலையில், கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, விருதுநகா், அரியலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பணத்தை மீட்டுத் தரக் கோரி கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
இது குறித்து முதலீட்டாளா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், செயலில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த முதலீட்டாளா்கள் ரூ.500 கோடிக்கும்மேல் முதலீடு செய்துள்ளனா். மோசடி நபா்கள் தற்போது வேறு ஒரு குழுவை ஆரம்பித்து அதில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்துகின்றனா். எங்களது பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.