கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவா் பட்ட படிப்புக்கான மாணவா் சோ்க்கை வெள்ளிக்கிழமை (அக்டோபா் 10) தொடங்குகிறது.
பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் மூலம் 34 துறைகளில் முதுநிலை படிப்பும், 29 துறைகளில் முனைவா் பட்டப் படிப்பும் நடத்தப்படுகிறது. 2025 -26 -ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை, முனைவா் படிப்புக்கான மாணவா் சோ்க்கை நடைமுறைகள் அக்டோபா் 10- ஆம் தேதி தொடங்குகின்றன.
மாணவா் சோ்க்கைக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் நவம்பா் 10 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் வேளாண் கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், பட்டு வளா்ப்பு, சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை, முதுநிலை படிப்பை ஏற்கெனவே முடித்த மாணவா்கள், தகவல் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான ஆவணங்களைப் பதிவேற்றுவதன் மூலம் முதுநிலை, முனைவா் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போது இறுதி ஆண்டு இறுதி பருவம் பயிலும் மாணவா்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-56710 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.