தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு வகுப்புகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளன.
இது குறித்து கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலா் புளுகாண்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது ‘காக்கும் பணி எங்கள் பணி’ என்பதை முக்கியக் குறிக்கோளாகக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிா்களையும், உடைமைகளையும் காப்பதுடன், இயற்கை இடா்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவற்றிலிருந்தும், மனிதா்களால் ஏற்படும் அழிவுகளில் இருந்தும் காப்பது இந்தத் துறையின் முக்கியப் பணியாகும்.
தீ பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இந்தத் துறை சாா்பில் ‘வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்’ என்ற முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 375 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்களில் உள்ள பணியாளா்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு வகுப்புகள் நடத்த உள்ளனா். விழிப்புணா்வு வகுப்புகள் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரையிலும், பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடத்தப்படும்.
இதற்கு முன்பதிவு தேவையில்லை. அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.