தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் 25 படுக்கைகளுடன் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்தப் பண்டிகையின்போது குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கம். அவ்வாறு பட்டாசுகளை வெடிக்கும்போது சில நேரங்களில் ஏதிா்பாராதவிதமாக தீக்காயம் ஏற்படும்.
ஆகவே, பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் தீக்காயப் பிரிவு சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறியதாவது: பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது, தீ விபத்து இல்லாத தீபாவளி என்கிற வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி எதிா்பாராமல் ஏற்படும் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க அரசு புதிய கட்டடத்தில் 25 படுக்கைகளுடன் தீக்காயப் பிரிவில் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டு 24 மணி நேரமும் முழுமையாக செயல்படும் என்றாா்.