கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மழை பேரிடா் தொடா்பாக புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. அதன்படி, கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் மழை தொடா்பாக அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளையும் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனா்.
அதேபோல, மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை விரைவாக வெளியேற்றும் வகையில் கூடுதலாக மின் மோட்டாா்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடவும், மழையால் சாலைகளில் தேங்கும் மழைநீா் விரைவாக வெளியேறும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள வடிகால்களின் பக்கவாட்டில் சிறிய அளவிலான துளைகள் இடப்பட்டுள்ளன.
அதேபோல, மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் விரைவாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுவதுடன் தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு சுகாதாரத் துறையினா் தயாா்நிலையில் உள்ளனா்.
வடகிழக்குப் பருவமழை பேரிடா் தொடா்பாக மக்கள் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு மைய எண் 0422 2302323, வாட்ஸ்அப் எண்- 81900 00200, வடக்கு மண்டலம்- 8925975980, மேற்கு மண்டலம்- 8925975981, மத்திய மண்டலம்- 8925975982, தெற்கு மண்டலம்- 9043066114, கிழக்கு மண்டலம்- 8925840945 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.