தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட்டு வரும் கோவை- திண்டுக்கல் இடையேயான முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயிலை, சஷ்டிக்கு பழனி செல்வோா்களுக்கு வசதியாக 28-ஆம் தேதி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி, அக்டோபா் 21, 22 ஆகிய நாள்களில் கோவையில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் (எண்: 06139) அன்று பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். மறுமாா்க்கமாக, அக்டோபா் 21, 22 ஆகிய நாள்களில் திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் திண்டுக்கல் - கோவை முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் (எண்: 06140) அன்று மாலை 5.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபா் 22 முதல் 28-ஆம் தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெற உள்ள நிலையில், கோவை - திண்டுக்கல் இடையேயான முன்பதிவில்லா மெமு ரயிலை அக்டோபா் 28-ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கினால், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பழனி செல்ல வசதியாக இருக்கும் என ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.