அரசு புறம்போக்கு ஏரி, குளங்களில் வண்டல் மண், கரம்பை மண் உள்ளிட்ட சிறு கனிமங்களை வீட்டு உபயோகம் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்கு உரிய அனுமதி பெற்று இலவசமாக எடுத்து செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு புறம்போக்கு ஏரிகள், குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண், சரளை மண் மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை விவசாய பயன்பாட்டுக்காகவும், வீட்டு உபயோகத்துக்காகவும், மண் பாண்டங்கள் செய்வதற்காகவும் எடுத்து செல்ல அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவர் ஒரு ஏக்கருக்கு 25 டிராக்டர் லோடும் (75 கன மீட்டர்), புஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவர் 30 டிராக்டர் லோடும், வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு நபர் ஒருவருக்கு 5 லாரி லோடு மண் வெட்டி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும். மண்பாண்டங்கள் செய்யும் நபர் ஒருவருக்கு 60 கன மீட்டருக்கு மிகாமல் மண் எடுத்து செல்ல அரசு அனுமதித்துள்ளது.
மண் எடுத்துச் செல்லும் நபர் ஒருவருக்கு 20 நாள்களுக்கு மிகாமலும், 2 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்ட அரசிதழில் 589 குளங்கள் மற்றும் ஏரிகள் தூர் வார அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஏரி, குளங்கள் அமைந்துள்ள வருவாய் கிராமம் அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்று இலவசமாக வண்டல் மற்றும் கிராவல் மண்ணை எடுத்து செல்லலாம்.
மேலும், ஏரி, குளங்களில் தூர் வாருவதன் மூலம் அதன் கொள்ளளவு அதிகரித்து மழைக்காலத்தில் கூடுதல் நீர் தேங்க வாய்ப்புள்ளதால் வரும் தென்மேற்கு பருவமழை காலத்துக்கு முன்பே நீர்நிலைகள் தூர்வாருவது அவசியமாகிறது. எனவே, இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.