புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் இதனை அமல்படுத்தக் கூடாது எனக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டணியின் மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜான்ஷா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துராமசாமி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய கல்விக் கொள்கையில் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வகையில் சுமார் 10 பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த பள்ளியாக செயல்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு தகுதித் தேர்வு நடத்துவதைக் கைவிட வேண்டும்.
பிளஸ் 2 முடித்தாலும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரியில் சேர முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும். மும்மொழிக் கல்வி கொள்கையைக் கொண்டு வந்து இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணிப்பதைக் கைவிட வேண்டும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே நீடிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதுபோல் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் சிவகுமார், நகரப் பொருளாளர் மணிவேல், நகரத் தலைவர் மூஷாராஜா ஜூனைதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநில பொதுக் குழு உறுப்பினர் மணி, மாவட்டப் பொருளாளர் தமிழ்செழியன் ஆகியோர் பேசினர். நகரச் செயலாளர் விக்டர் செல்வகுமார், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
அம்மாபேட்டையில்...: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அம்மாபேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவர் ஆர்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சி.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் யூ.கே.சண்முகம் கோரிக்கையை விளக்கிப் பேசினார்.
குறுவள மையங்களின் தலைமையிடமாக மேல்நிலைப் பள்ளிகளை உருவாக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 ஐ திரும்பப் பெற வேண்டுவது உள்பட 5 அம்சக் கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், வட்டாரச் செயலாளர்கள் ப.சண்முகசுந்தரம், செந்தில்குமார், முன்னாள் வட்டாரத் தலைவர் கு.மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.