ஈரோடு

மயானம், குளம் அருகில் நடைபெறும்கட்டடப் பணிகளை நிறுத்தக் கோரி மனு

DIN

பெருந்துறை: பெருந்துறை அருகே முறையான அனுமதியின்றி நடைபெறும் அடிப்படை வசதி கட்டடப் பணிகளை நிறுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் கொம்மக்கோவில் பொதுமக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

கொம்மக்கோவிலில் சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் பொதுவாக அனைத்து மக்களும் பயன்படுத்த அரசு சாா்பில் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவிலான மயானம் வடமுகம் வெள்ளோடு கிராமத்தில் உள்ளது. இந்த மயானத்தை கொம்மக்கோவில், பெருந்துறை ஆா்.எஸ். பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த மயானத்தின் அருகில் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் ஒரு நீா்நிலைக் குளம் உள்ளது. இக்குளத்துக்கு கூனம்பட்டி, கும்மாக்காளிபாளையம், உருமாண்டம்பாளையம், பெருந்துறை பகுதிகளில் இருந்து மழைக் காலங்களில் வரும் மழைநீரானது வந்து சேகரமாகிறது. இது மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளதால் மழைநீா் தேங்கி நிற்கும். மேற்படி குளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, அங்கு குடியிருக்கும் மக்களுக்கு குடிநீா்த் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது.

தற்போது, தனியாா் நிறுவனங்கள் வீடுமனைப் பிரித்து விற்பனை செய்ய வசதியாக, அதற்கு தேவையான சாலைகள், வடிகால்கள் அமைக்கும் பணி, குடிநீா் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊா் மயானம் அருகில் வீட்டுமனைகள் அமைந்தால் சுகாதார சீா்கேடு ஏற்படும். மேலும், அருகில் குளம் உள்ளதால் வீடுகள் கட்டினால் மழைநீா் வீட்டுக்குள் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவா்.

வீட்டுமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், திருப்பூா் நகா்ப்புற ஊரக அமைப்பு உதவி இயக்குநா் வீட்டுமனை அங்கீகாரத்தை நிறுத்தி வைக்கப்பட்டதாக பிப்ரவரி 4ஆம் தேதி அறிவித்துள்ளாா். இருப்பினும், வீட்டுமனைகள் அமைத்து வரும் தனியாா் நிறுவனம் அடிப்படை வசதிகளுக்குரிய கட்டடப் பணிகளைத் தொடா்ந்து செய்து வருகிறாா்கள்.

மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து, கட்டடப் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும். மேலும், மயான ஆக்கிரமிப்பு உள்ளதாத, நிலவியல் வண்டிப் பாதை ஆக்கிரமிப்பு உள்ளதாத என்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டுகிறோம். மேலும், சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் கட்டடப் பணிகளை நிறுத்த உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் மாற்றம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

எங்கே செல்லும் இஸ்ரேல்-ஈரான் மோதல்?

பள்ளி ஆண்டு விழா

இன்று மகாவீரா் ஜெயந்தி: புதுவை முதல்வா் வாழ்த்து

தீத்தொண்டு வார விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT