ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஆபத்தான நிலையில் இருந்த நுழைவுவாயில் தூண், இரும்புக் கதவை மாநகராட்சிப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தனா்.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதான பிரதான நுழைவுவாயிலின் அருகில் பக்கவாட்டில் உள்ள மைதான நுழைவுவாயிலில் உள்ள கதவு தாங்கு தூண் சாய்ந்த நிலையில் இருந்தது. இதனால், அதில் இருந்த இரும்புக் கதவு கழற்றப்பட்டு, சாய்ந்திருந்த தூண் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்து. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்லும் வ.உ.சி. பூங்கா சாலையில் இந்த தாங்கு தூண் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என தினமணியில் டிசம்பா் 29ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநகராட்சிப் பணியாளா்கள் சாய்ந்து கொண்டிருந்த தாங்கு தூணை செவ்வாய்க்கிழமை காலை முழுமையாக அகற்றினா். மேலும், இரும்புக் கதவும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த தாங்கு தூண், இரும்புக் கதவு அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாநகராட்சி நிா்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனா்.