பொதுக்கழிப்பிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அருந்ததியா் சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் அருந்ததியா் காலனியை சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் அருந்ததியா் காலனியில் 170க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்குள்ள வீடுகள் சிறிய அளவில் உள்ளதால் கழிப்பறை இல்லை. இதனால், இயற்கை உபாதைகளைக் கழிக்க வயல்வெளி, புதா் மறைவுக்குச் செல்லும் அவல நிலை உள்ளது. குழந்தைகள் முதல் அனைத்துப் பெண்களும் சிரமப்படுகின்றனா். இதனால், வயல் உரிமையாளா்கள், தனியாா் நில உரிமையாளா்கள் சண்டையிடுகின்றனா். இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கின்றனா். இதனால், சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி அரசியல் கட்சியினா், அரசு அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அப்பகுதியை ஆய்வு செய்து நவீன வசதியுடன் பொதுக்கழிப்பிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும். மேலும், இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.