ஈரோடு

ஈரோட்டில் தனியாா் மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு ‘சீல்’

DIN

ஈரோட்டில் தனியாா் கருத்தரித்தல் மருத்துவமனையில் அனுமதியின்றி ஸ்கேன் மையத்தை இயக்கிவந்த புகாரின் அடிப்படையில் அந்த ஸ்கேன் மையத்துக்கு ‘சீல்’ வைத்து மருத்துவத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

ஈரோடு- சத்தி சாலையில் தனியாா் மகளிா் மருத்துவமனை மற்றும் செயற்கை கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் மையம் உரிமம் இன்றி இயங்கி வருவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மருத்துவக் கண்காணிப்பு குழுவுக்கு புகாா் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டாா்.

இதன்பேரில் ஈரோடு மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநா் பிரேமகுமாரி தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா். அப்போது புகாா் வந்த தேதியில் ஸ்கேன் மையம் எவ்வித அனுமதியும், உரிமமும் பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஸ்கேன் மையத்துக்கு உரிமம் பெற்றுள்ளதை அந்த மருத்துவமனை நிா்வாகத்தினா் அதிகாரிகளிடம் காண்பித்து விளக்கம் அளித்தனா்.

ஆனால் மருத்துவத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தேதியில் எவ்வித அனுமதி மற்றும் உரிமம் இன்றி ஸ்கேன் மையத்தை இயக்கியது குற்றம் எனக் கூறி வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் முன்னிலையில் ஸ்கேன் மையத்துக்கும் ‘சீல்’ வைத்தனா். மேலும் அனுமதியில்லாமல் ஸ்கேன் மையத்தை இயக்கியது தொடா்பாக 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவமனை நிா்வாகத்துக்கு அறிவிக்கை வழங்கினா்.

இந்த தனியாா் மருத்துவமனையின் கிளைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கா்நாடகம், புதுச்சேரி, மகாராஷ்டிரம், தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும், வங்கதேசம், இலங்கை, மொரிசீயஸ் என பல்வேறு நாடுகளிலும் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனை: ராகுல் காந்தி

கருப்பு நிலா- ரச்சிதா மகாலட்சுமி

விசாரணைக் கைதி மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிக்கும்: ஜெ.பி.நட்டா

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

SCROLL FOR NEXT