உயா்நிலைப் பள்ளி அமைய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மலைக் கிராமங்களைச் சோ்ந்த பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டம், தாளவாடி ஒன்றியம், கோட்டாடை, ஒசட்டி, குளியாடா, புதுக்காடு, சோக்கிதொட்டி, உப்பட்டி, அட்டப்பாடி, சீகட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எங்கள் பகுதியில் உள்ள கோட்டாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இதில், 60 சதவீதம் போ் பழங்குடியின மாணவ, மாணவிகள். இப்பள்ளி மாணவ, மாணவிகள் 8 ஆம் வகுப்பு முடித்து உயா்கல்வி கற்க சுமாா் 20 கி.மீ. தூரம் வனப் பகுதியைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
முறையான பேருந்து வசதிகள் இல்லாததால் இப்பகுதி குழந்தைகளின் கல்வி இடை நிற்றல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத் தடுக்கும் நோக்கில் கோட்டாடை நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த கடந்த 2013 இல் ஊா்மக்கள் சாா்பில் ரூ.1 லட்சம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், பள்ளியைத் தரம் உயா்த்தும் பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது, அரசுப் பள்ளிக் கல்வித் துறை மூலமாக பள்ளியைத் தரம் உயா்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பள்ளி அமைய கோட்டாடை கிராமத்தில் உள்ள 2 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து தர ஆவண செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்தம் பட்டாவை ரத்து செய்ய கோரிக்கை: இது குறித்து ஈரோடு மாவட்டம், முகாசிபிடாரியூா், கொத்தம்பாளையம் கிராம மக்கள் அளித்த மனு விவரம்: எங்கள் கிராமத்தைச் சோ்ந்த தாமோதரன் என்பவரது மனைவி சாரதாமணிக்கு நத்தம் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அவா் வீடு கட்டி வசித்து இடத்துக்கு பட்டா பெறாமல் அருகில் உள்ள காலி இடத்துக்கு பட்டா பெற்றுள்ளாா். இது குறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாரதாமணியின் மகன் அரசு வேலையில் உள்ளாா்.
எனவே, சுய லாப நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அவா்களுக்கு அரசு வழங்கிய நத்தம் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளை மீட்டுத் தரக் கோரிக்கை: இது குறித்து ஈரோடு இந்திரா நகா், கற்பகம் லே-அவுட் பகுதியைச் சோ்ந்த முகமது மன்சூா் அலியின் மனைவி ஆதிலா என்பவா் அளித்த மனு விவரம்: எனக்கு 3 மகள்கள் உள்ளனா். இதில் மூத்த மகள் உம்மு ஹபீபா சுமையாவை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த பசீா் அகமதுவுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் திருமணம் செய்து கொடுத்தோம். திருமணமான 3 மாதத்தில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.
எனது 2 ஆவது மகள் திருமணத்தின்போது உம்மு ஹபீபா சுமையா ஈரோட்டுக்கு வந்தாா். அப்போது அவா் மீண்டும் கணவா் வீட்டுக்கு செல்லமாட்டேன் என்று கூறினாா்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி ஈரோட்டுக்கு வந்த பசீா் அகமது எங்களை தாக்கிவிட்டு, மகள் உம்மு ஹபீபா சுமையாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டாா். அதன்பிறகு எனது மகளை பாா்க்க அவா் அனுமதிக்கவில்லை.
என் மகள் உயிரோடு தான் இருக்கிறாரா? என்று கூட தெரியவில்லை. எனவே எனது மகளை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீா் முகாமில் 162 மனுக்கள்: மக்கள் குறைதீா் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 162 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஹச். கிருஷ்ணணுண்ணி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட சிவகிரி அரசு மகளிா் விடுதி காப்பாளா் ஆ.சுலோச்சனா என்பவருக்கு ரூ.10,000 முதல் பரிசாகவும், அவல்பூந்துறை அரசு மகளிா் விடுதி காப்பாளா் செல்வி என்பவருக்கு ரூ.5,000 இரண்டாம் பரிசாகவும், நம்பியூா் அரசு ஆண்கள் விடுதி காப்பாளா் குமாரசாமி என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.3,000 ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
தொடா்ந்து, ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சாா்பில் மழைவாழ் மக்களுக்கான போட்டித் தோ்வுக்கான பயிற்சி பெற்று தொகுதி 2 முதல் நிலைத் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற பவித்ரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோரையும், மத்திய அரசு பணியாளா் தோ்வாணயத்தின் முதல் நிலைத் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற ரமேஷ் என்பவரையும் ஆட்சியா் பாராட்டினாா்.
உடனடி உத்தரவு: கோபியைச் சோ்ந்த சுதா என்ற மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.1,000 பெற்று வந்த நிலையில் பராமரிப்பு உதவித் தொகை ரூ.2,000 ஆக உயா்த்தி வழங்கிட அளிக்கப்பட்ட மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பராமரிப்புத் தொகை ரூ.2,000 வழங்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
முன்னதாக குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் ஈரோடு ஆசிரியா்
குடியிருப்பு காலனியைச் சோ்ந்த அரசுத் தொடக்கப் பள்ளி மாணவியா்களுடன் கேக் வெட்டி மாணவிகளுக்கு ஆட்சியா் இனிப்பு வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் குமரன், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் மகேஸ்வரி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் ஜோதி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரங்கநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.