ஈரோடு மண்டல அளவிலான மின் வாரிய ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம் டிசம்பா் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின் வாரிய ஈரோடு மண்டலத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் வாரிய உத்தரவின்படி, ஈரோடு மண்டலத் தலைமைப் பொறியாளா் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மின் வாரிய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடியாக அவற்றைத் தீா்த்துவைக்க 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான 4 ஆம் காலாண்டுக்கான மின்வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் வரும் டிசம்பா் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் நடைபெறவுள்ளது.
தனிநபா் மனுக்கள் மற்றும் ஓய்வுபெற்றோா் சங்கங்களின் கோரிக்கைகள் முற்பகலில் பெற்றுக்கொள்ளப்படும்.
எனவே, மின்வாரியத்திலிருந்து ஓய்வுபெற்ற அலுவலா்கள், பணியாளா்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.